Saturday, August 1, 2020

இந்திய இராணுவத்தை இந்தியர்களுக்காக மாற்றிய பீல்டு மார்சல்


இந்திய இராணுவத்தில் அதிக விருதுகள் பெற்ற தளபதிகளுள் ஒருவர்.இடையிலா தேசப் பக்தியுடன் சுடராய் விளங்கியவர்

 
கொடன்டேரா மடப்பா கரியப்பா நிறைய சாதனைகள் செய்திருந்தாலும் இந்திய இராணுவத்தை முழுதும் இந்தியத்திற்கு மாற்றியது அவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாக உள்ளது.இதனால் தான் இன்று இந்திய தளபதி தலைமை தளபதியாக உள்ள பிபின் ராவத் அவர்கள் கரியப்பா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க நேரம் வந்துள்ளதாக கூறுகிறார்.இந்த நாள் வரையில் எந்த இராணுவ வீரர்களும் பாரத ரத்னா விருது பெற்றதில்லை.பாரத ரத்னா இந்தியர்களின் மிக உயரிய மதிக்கத்தக்க விருதாக உள்ளது.

கே எம் கரியப்பா அவர்கள்
இந்திய இராணுவத்தின் அதிக கொண்டாடப்பட்ட தளபதியாக இருந்தும் இந்தியர்களுள் வெகு சிலரே பீல்டு மார்சல் கரியப்பா அவர்களை பற்றி தெரிந்துகொண்டுள்ளனர்.

இது பீல்டு மார்சல் கரியப்பா அவர்களின் வெற்றிக்கதை.தமிழர்கள் அனைவரும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.இந்தியாவின் மேன்மைதாங்கிய வீரர் ,தளபதி பீல்டு மார்சல் கரியப்பா அவர்களின் வீரவரலாறு.

 
ஜனவரி 28, 1899, பிரிட்டிஷ் இந்தியாவில் ஆறு குழந்தைகளுள் ஒருவராக பிறந்தார்.அவரது குழந்தை காலத்தை கர்நாடகத்தின் அழகிய மாவட்டமான கூர்க்கில் கழித்தார்.
அந்த மாவட்டத்தில் இருந்து நிறைய வீரர்கள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளனர்.

பிரதமர் நேரு அவர்களுடன் கரியப்பா அவர்கள்
“சிம்மா” என தனது குடும்பம் மற்றும் நண்பர்களால் அழைக்கப்பட்ட அவர் இளவயதிலேயே அதிகாரியாக வேண்டும் என்ற கனவை இலக்காக்கினார்.மடிகேரியில் தனது உயர்கல்வியை முடித்த அவர் மெட்ராஸ் பிரசிடன்சி கல்லூரியில் இணைந்தார்.கிட்டத்தட்ட இந்த காலத்தில் தான் இந்தியர்கள் இராணுவத்தில் அதிகாரிகளாக இணைத்துகொள்ள படுகின்றனர் என்ற தகவலையும் அவர்களுக்க இந்தியாவிலேயே பயிற்சி தருகிறார்கள் என்ற தகவலையும் அறிந்து கொண்டார்.

இந்தோரில் உண்மையாகவே ஒரு கேடட் கல்லூரி திறந்துள்ளதை உறுதிப்படுத்திக்கொண்ட அவர் உடனடியாக அந்த கல்லூரியில் இணைய விண்ணப்பித்தார்.அவருடன் 70 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 42 பேருக்கு அனுமதி கிடைத்தது.அதில் கரியப்பா அவர்களும் ஒருவர்.

 
தனது கடின உழைப்பு மற்றும் அர்பணிப்பு உணர்வு காரணமாக முதல்தர மாணவராக உயர்ந்தார்.போர் தந்திரம்,இராணுவ யுத்த தந்திரம்,தலைமை நுட்பங்கள் மற்றும் மேலான்மை குறித்த பாடங்களில் சிறந்து விளங்கினார்.

அவரது திறனை உணர்ந்த உயரதிகாரிகள் அவரை ராயல் இராணுவக் கல்லூரிக்கு அனுப்பினர்.1919ல் அவர் 2வது லெப்டினன்டாக படையில் இணைந்தார்.முதன் முதலாக 2வது பட்டாலியன் கர்நாடிக் இன்பான்ட்ரியில் பணி பெற்றார்.அதன் பிறகு நேப்பியர் ரைபிள்ஸ் மற்றும் பிறகு ராஜ்புத் லைட் இன்பாட்ரியில் பணி நியமனம் பெற்றார்.

1933ல் குவட்டா ஸ்டாப் கல்லூரியில் நுழைவு தேர்வில் வெற்றி பெற்றார்.அங்கு படித்த முதல் இந்திய இராணுவ அதிகாரி என்ற பெயரையும் பெற்றார்.1942ல் ஒரு இராணுவ குழுவை வழிநடத்தும் தலைமை பொறுப்பை பெற்றார்.அவருக்கு கீழ் பிரிட்டிஷ் அதிகாரிகள் பணிபுரிந்தனர்.இது போல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தலைமை ஏற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி அவர் தான்.

 
நான்கு வருடங்களுக்கு பிறகு 1946ல் கரியப்பா அவர்கள் முன்னனி பிரிகேடு குழுவின் பிரிகேடியாராக பதவி உயர்வு பெற்றார்.இந்த நேரத்தில் தான் பின்னாளில் பாகிஸ்தான் தலைமை தளபதியாக இருந்த கலோனல் ஆயுப் கான் கரியப்பா அவர்களின் கீழ் பணியாற்றினார்.

இந்த நேரத்தில் தான் இந்திய தேசிய இராணுவ வீரர்களை பிரிட்டிஷார் கைதிகளாக வைத்திருந்தனர்.ஒரு முறை அந்த கேம்புக்கு வந்த கரியப்பா அவர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பிரிட்டிஷ் உதவி தளபதிக்கு கடிதம் எழுதினா்.அதை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷார் வீரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தினர்.கரியப்பா அவர்களின் இந்த நடவடிக்கை பெரும்பாலோனரால் பாராட்டப்பட்டது.

மேலும் குற்றமற்ற கைதிகளாக இருந்த வீரர்களை விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.இதை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷார் பெரும்பாலான இந்திய தேசிய இராணுவ வீரர்களை விடுவித்தது.கலோனல் பிரேம் குமார்,குர்பக்ஸ் சிங் தில்லான் மற்றும் ஷா நவாஸ் கான் ஆகிய வீரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கலோனல் பிரேம் குமார்,குர்பக்ஸ் சிங் தில்லான் மற்றும் ஷா நவாஸ் கான்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் தான் 1947ல் மிக கடுமையாக போராடி இந்திய மக்கள் சுதந்திரம் பெற்றிருந்தனர்.இந்த நேரத்தில் தான் கரியப்பா அவர்கள் ஈராக்,சிரியா ,ஈரான் மற்றும் பர்மா பகுதியில் படை நடத்தி பல விருதுகளை பெற்றிருந்தார். இரண்டாம் உலகப் போரின் பர்மா முனையில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக அவருக்கு ” ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்” விருதை அளித்தது பிரிட்டன்.

 
அதே வருடம் இந்தியா புதிய சுதந்திர தேசமாக முதல் அடியை எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிக்கு இணைந்தார் கரியப்பா அவர்கள்.அங்கு இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையும் அவரையே சேரும்.பயிற்சி முடித்து தேசம் திரும்பி இராணுத்தின் மேற்கு கட்டளையகத்தின் தளபதியாக பொறுப்பேற்றார்.

இந்த நேரத்தில் தான் பாக்கிஸ்தானின் லாஷ்கர் பழங்குடிகள் ( அவர்களுடன் பாக் இராணுவமும்) காஷ்மீரை தாக்கினர்.இந்த பகுதிகளுக்கான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு கரியப்பா அவர்கள் தான் பொறுப்பேற்றிருந்தார்.ஜம்மு-நௌசேரா பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டனர்.ஸோஷி லா,ஜாங்கர்,பூஞ்ச்,ட்ராஸ் மற்றும் கார்கில் ஆகியவை கைப்பற்றப்பட்டன.லே உடனான தொடர்பு ஏற்படுத்தப்பட்டு ஆபரேசன்கள் தொடர்ந்தன.

திட்டமிடலில் கரியப்பா அவர்கள்
ஆபரேசனை தொடர்ந்து நடத்த அவரது தலைமை அதிகரியான அப்போதைய இராணுவ தளபதி சர் ராய் பட்சர் அனுமதி அளிக்கவில்லை.இதற்கு தனது மனக்கசப்பை வெளியிட்ட அவர் இது எதிர்காலத்தில் காஷ்மீரின் பாதுகாப்பிற்கு பிரச்சனையாக அமையும் என வாதிட்டார்.தொடர்ந்து அனுமதி கிடைக்காத போதும் தலைமை தளபதியின் ஆர்டரையும் மதிக்காமல் லே-லடாக்கில் மிக கடினமான தாக்கும் நடவடிக்கைகளை நடத்தி அவற்றை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

ராய் பட்சர்,லேடி பட்சர் , ராஜகோபாலச்சாரி அவர்களுடன் கரியப்பா அவர்கள்
1949 ஜனவரி 1 ல் ஐநாவின் கீழ் போர்நிறுத்த ஒப்பந்தம் என்ற அரசின் நிலையையும் அவர் எதிர்த்தார்.அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.பிரதமர் நேருவுக்கும் இது தொடர்பான ஒரு அதிருப்தி கடிதத்தையும் அவர் அளித்தார்.

1949 ஜனவரி 15 அன்று இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார் கரியப்பா அவர்கள்.பிரிகேட் ஆப் கார்ட்ஸ், பாரசூட் ரெஜிமென்ட் மற்றும் பிராந்திய இராணுவம் போன்ற படைப் பிரிவுகள் தொடங்க காரணமாக இருந்தார் கரியப்பா அவர்கள்.

1948லிலேயே என்சிசி தொடங்கப்பட்டாலும் அதை வலுப்படுத்தி அதற்கு பக்கபலமாக இருந்தவர் கரியப்பா அவர்கள்.

 
சாதிய அடிப்படையிலான ரிசர்வேசன் என்ற திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார்.வீரர்களுக்கிடையே “ஜெய்ஹிந்த்” என்று மரியாதை நிமித்தம் அழைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தார்.

புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்.விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.எப்போதும் முன்னனியில் நின்று வழிநடத்தக்கூடியவர்.வீரர்களுடன் அடிக்கடி நேரடியாக உரையாடும் வழக்கம் கொண்டவர்.அவர்களது உணவு முறைகளை பற்றி அடிக்கடி விசாரித்து கொள்வார்.

“என்னால் செய்ய முடியாதவற்றை நான் எனது வீரர்களை செய்ய சொல்லமாட்டேன்” என அவர் வீரர்களை அடிக்கடி புத்துணர்ச்சியூட்டுவார்.

முதல் இந்திய பாகிஸ்தான் போரின் போது காஷ்மீரில் பல பகுதிகளில் கடும் உணவு பற்றாக்குறை நிலவியது. ஒருமுறை கரியப்பா அவர்கள் பாகிஸ்தான் படைகளை விரட்டி செல்லும்போது பாரமுல்லா பகுதியில் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு உணவு பற்றாக்குறை குறித்து கூறினர். உடனடியாக தன்னால் இயன்றதை செய்வதாக உறுதி அளித்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கினார். அதேபோல் அடுத்த நாளே தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். உணவு பொருட்களை அங்கு விநியோகம் செய்தார். இதை பார்த்து உத்வேகமடைந்த மற்றொரு சிறந்த அதிகாரியான கே.எஸ். திம்மய்யாவும் இதனை செய்தார். இதனால் நெகிழ்ந்து போன காஷ்மீர் மக்கள் பாரமுல்லாவில் ஒரு பூங்காவுக்கு கரியப்பா என பெயர் சூட்டினர் இன்றும் அங்கு இதனை காண முடியும்.

முன்னாள் பாகிஸ்தான் அதிபரும் ஃபீல்ட் மார்ஷலுமான அயூப் கான் சுதந்திரத்திற்கு முன்னர் ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்களின் கீழ் பணிபுரிந்தவர். 1965 போரின் போது கரியப்பா அவர்களின் மகன் ஃப்ளைட் லெஃப்டினன்ட் நந்தா கரியப்பா ஒட்டி சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. உடனடியாக அயூப் கான் கரியப்பா அவர்களை தொடர்பு கொண்டு அவரது மகனை விடுவிப்பதாக கூற கரியப்பா அவர்கள் ” அவன் எனது மகனல்ல, இந்த நாட்டின் மகன், இந்திய நாட்டின் போர்வீரன், உங்களது நல்லெண்ணத்திற்கு நன்றி கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய வீரர்களையும் விடுவிப்பதாக இருந்தால் விடுதலை செய்யுங்கள் இல்லையெனில் வேண்டாம், எனது மகனை மற்ற வீரர்களை போன்றே நடத்துங்கள் எந்த வித சிறப்பு மரியாதையும் வேண்டாம்” என பதில் கூறினார். அந்தளவுக்கு நாட்டின் மீது பற்று கொண்டிருந்தார்.

கரியப்பா அவர்கள் 1953ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார். அவருக்கு 1986ஆம் ஆண்டு ஃபீல்ட் மார்ஷல் பதவி அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஹார்ரி ட்ருமேன் இந்திய அமெரிக்க உறவில் முக்கிய பங்கு வகித்த காரணத்தால் “ஆர்டர் ஆஃப் தி சீஃப் கமாண்டர் ஆஃப் தி லீஜியன் ஆஃப் மெரிட்” என்ற விருதை வழங்கினார்.

ஒய்வுப்பெற்ற பின்னர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவுப் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் முன்னாள் படை வீரர்கள் நலனுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பற்றி இங்கு அரசுக்கு எடுத்துரைத்தார்.

வயதான பின்னரும் நாட்டு பற்று காரணமாக 1965 மற்றும் 1971 போர்களில் போர்க்களத்திற்கு சென்று படை வீரர்களை உற்சாகமூட்டினார். 94 வயதில் பெங்களூர் நகரில் இயற்கை எய்திய அவரின் இறுதி சடங்கில் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக்சா மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

ரவீந்தர் கௌஷிக்

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை ...